இந்திய பிரதமர் மோடி இன்று இலங்கை வருகிறார் – பிராந்தியத்தில் எத்தகைய தாக்கத்தை செலுத்தும்?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமைய உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

மோடியின் இந்த பயணத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட உயர்மட்ட குழுவொன்றும் இலங்கை வருகிறது.

பிரதமர் மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி நாளைமறுதினம் 6ஆம் திகதி அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு பிரதமர் மோடி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார்.

மோடியின் இந்தப் பயணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தும் என பொருளாதார நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பாதுகாப்பு ரீதியான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடபடும் பட்சத்தில் அது பிராந்திய நலனுக்கு முக்கியமான மைல் கல்லாக அமையும் என இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதுடன், அது இலங்கையின் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்கிறனர்.

இதேவேளை, அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பின்னர் மாற்றும் ஏற்றுமதி நாடுகளை பல நாடுகள் தேடி வருகின்றனர். இந்திய ஆசிய பிராந்திய நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இலங்கை இந்தியாவுக்கு இடையிலான வர்த்தக விரிவாக்கம் குறித்து இந்த பயணத்தில் மோடியும் அநுரவும் ஆழமாக ஆராய்வாளர்கள் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *