மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது – தமிழக முதல்வர் கவலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 04,05,06ஆம் திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறை பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச ரீதியில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் நெருங்க உறவுகள் உருவாகியுள்ளதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி தமது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தில் அவர் விடுத்த அழைப்பின் பிரகாரம் பிரதமர் மோடி இலங்கைக்கு வந்திருந்தார்.

இந்தப் பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் அவர் சந்தித்திருந்ததுடன், அநுராதபுரம் மகா விகாரையிலும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த விஜயத்தில் இலங்கைக்குக்கும் இந்தியாவுக்கும் இடையில் 7 புதிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அதில் சம்பூரில் சூரிய சக்தி நிலையத்தை அமைத்தல், கேபிள் முறையில் மின்சாரத்தை பரிமாற்றிக் கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கல், இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்கள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தப் பயணத்தில் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் விவகாரமும் பிரதான பேசுபொருளாக இருந்தது. இந்திய மீனவர்கள் மற்றும் அவரது படகுகளை விடுதலை செய்ய வேண்டும் என் பிரதமர் மோடி பகிரங்க கோரிக்கையொன்றையும் முன்வைத்திருந்தார்.

இதன் பிரகாரம் ராமேஷ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.

ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை. இது வேதனை அளிக்கிறது.இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்கவும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத பிரதமரின் இலங்கை பயணம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *