புதிய வரிக் கொள்கையை மறுசீரமைக்க வேண்டும் – அமெரிக்காவிடம் இலங்கை வலியுறுத்து

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்குடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள புதிய புதிய வர்த்தக வரிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து தமது ‘X’ (எக்ஸ்) தளத்தில் பதிவிட்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இந்த கலந்துரையாடலில் அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தியதாகவும், அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளுக்கு பரஸ்பர நிவாரணத்தின் முக்கியத்துவத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் நமது இரு நாடுகளிலும் தொழில்களை பலப்படுத்துகிறது என்றும் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் தமது புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பிரகாரம் இலங்கைக்கு 44 வீத வரியை விதித்துள்ளது.

இந்த வரி விதிப்பு இலங்கையின் ஆடை ஏற்றுமதி உட்பட பல்வேறு துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரியை மறுசீரமைப்பதற்கான பேச்சுகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளார்.

வரிக் குறைப்பை மேற்கொள்ள அரசாங்கம் தொடர்ச்சியாக அமெரிக்காவுடன் பலகட்ட பேச்சுகளில் ஈடுபட உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *