இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்படிக்கையின் மூலம் இலங்கை பாரதத்தின் ஒரு அங்கமாக மாறும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”சுதந்திர இலங்கையின் எந்தத் தலைவரும் செய்யாத ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் செய்துள்ளது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உலக அரசியல் போக்குகளை நன்கு புரிந்து கொண்டவர்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் தேசிய பாதுகாப்பு குறித்து நல்ல அறிவைக் கொண்டிருந்தனர். உலக அதிகாரப் போராட்டத்தில் இலங்கையை ஒரு பக்கம் அழைத்துச் செல்வது அதன் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத் தலைவர்கள் யாரும் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
ஏனென்றால் எமக்கு அனுபவம் இருந்தது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கையில் விமான மற்றும் கடற்படை தளங்களை பராமரிக்க பிரிட்டனுடன் எட்டப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் பிரதமர் பண்டாரநாயக்க ரத்து செய்தார்.
2050 ஆம் ஆண்டுக்குள், உலகின் முக்கிய வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் இருக்கும். எனவே, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கத்திய சக்திகள் இந்தியாவைச் சுற்றி அணிதிரள்கின்றன. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட COD, அத்தகைய ஒரு அமைப்பாகும்.
அன்று சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இரண்டு அதிகாரத் தளங்கள் இருந்தது போல் நாளைய அதிகாரத் தளங்கள் இந்தியாவும் சீனாவும் தான். நாங்கள் அணிசேரா நிலையில் இருந்தோம். இரண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் சேரவில்லை. இந்த நேரத்திலும் நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். இத்தகைய சூழலில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது தற்போதைய அரசாங்கத்திற்கு தேசிய பாதுகாப்பு அல்லது உலகளாவிய போக்குகள் குறித்த புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இலங்கையை மாற்றும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

