டேன் பிரியசாத் சுட்டுக்கொலை – தந்தை, மகனின் கடவுச்சீட்டு முடக்கம்

“நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பான சில தகவல்களை வெல்லம்பிட்டி பொலிஸார் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

டேன் பிரியசாத்தின் கொலை தொடர்பாக விசாரணைகளை தந்தை, மகனுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன ஆகிய இருவரும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கவும், அவர்களின் தொலைபேசி பதிவுகளைப் பெறவும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரினர்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல, சம்பந்தப்பட்ட இருவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.

இறந்தவரின் சகோதரரான திலின பிரசாத் பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அந்த சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் மகன் இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தற்போதைய சம்பவம் தொடர்பாக சுமார் 10 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார், மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று இரவு, வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் வைத்து சமூக டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு ஒரு விருந்தின் போது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். என்றாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று காலை அறிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *