துப்பாக்கிச் சூடுகளால் அதிரும் இலங்கை – அச்சத்தில் பொது மக்கள்

இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களினால் நடத்தப்படும் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன.

2025ம் ஆண்டின் தொடக்கம் முதல் நேற்று (வியாழக்கிழமை) வரை பதிவான தகவல்களின் பிரகாரம், 43 துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு பதிவான துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 30 வரையான சம்பவங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய  துப்பாக்கி பிரயோகங்களும் தனிப்பட்ட காரணங்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட அனைத்து துப்பாக்கி பிரயோகங்களுடனும் தொடர்புடைய நூறுக்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவங்களுடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை இவ்வாறு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடுகள் பதிவாகி வருவதால் பாதை செல்வதற்கு அச்சமாக உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். தமது பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாதுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக குற்றவாளிகள் பொது வெளியில் அச்சமின்றி துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றனர். இதனால் பொது இடங்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் இதுகுறித்து உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, பிரபல அரசியல் செயல்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி ஹர்ஷண கெகுணவெலவின் உத்தரவின்படி இந்த அடையாள அணிவகுப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது, மூன்று சாட்சிகள் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிடுகையில் இந்த விசாரணை தவறான பாதையில் செல்வதாகக் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் இந்தச் சம்பவத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள் என்றும், உண்மையான துப்பாக்கிதாரிகள் வெளியில் சுதந்திரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடையாள அணிவகுப்புக்கு அழைக்கப்பட்ட சாட்சிகளில் இருவர் இரண்டாவது சந்தேக நபரின் உறவினர்கள் என்று குறிப்பிட்ட சட்டத்தரணி, சந்தேக நபரை நன்கு அறிந்த உறவினர்கள் இருவர் அவரை அடையாளம் காண அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் வாதிட்டார்.

எனினும், விசாரணைகளை மேற்கொள்ளும் மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரி, நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் மற்றும் CCTV காட்சிகளின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, கொட்டாவை மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *