பிரபாகரனின் உப்பு இனி இல்லை

உப்பு பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் உப்பை தெற்கிற்கு வழங்க வேண்டாம் என தொழிற்சாலையின் ஒருசில ஊழியர்களுடன் அர்ச்சுனா எம்.பி போராட்டம் நடத்தியுள்ளார்.

வடக்கு உப்பு, தெற்கு உப்பு என எந்தவொரு உப்பும் இல்லை. எங்களிடம் இலங்கையின் உப்புதான் உள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரனின் உப்பை வைத்திருந்திருக்கலாம். இனி அத்தகைய உப்பு இல்லை. நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தமது இன்றைய நாடாளுமன்ற உரையில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி., வடக்கின் உப்பை தெற்கிற்கு அனுப்பக்கூடாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை. ஆனையிறவு உப்பளங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமே மத்தியஸ்தம் செய்தேன். நான் இனவாதம் பேசவில்லை. எனது மனைவிக்கூட ஒரு சிங்களவர். பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் கோருகிறேன் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஹந்துன்நெத்தி, தான் பொய் சொல்லவில்லை என்றும், ஆனையிறவு உப்பள ஊழியர்கள் மற்றும் அர்ச்சுனா எம்.பி. வுடன் நடந்த கலந்துரையாடல்களின் குறிப்புகளை மேற்கோள் காட்டியே கருத்துகளை வெளியிட்டேன் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *