பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்ற ஒருநாட்டில் ஊடகச் சுந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர முற்படும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
‘‘சிவில் பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடையது. அதில் ஊடகச் சுதந்திரம் பிரதானமானது. ஜனநாயக ஆட்சியில் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறைக்கு அடுத்தபடியாக நான்காவது ஜனநாயக தூணாக ஊடகத்துறை உள்ளது.
ஊடகங்களையும், ஊடகவியலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க அல்லது கட்டுப்படுத்தும் நோக்கில் ஆணைக்குழுகளை அமைக்க முற்படுவது, அந்த அரசாங்கத்தின் இயலாமையையும் தோல்வியையுமே வெளிக்காட்டுகிறது.
எமது நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் எதிர்பார்க்கும் வகையில் ஊடகத்துறையை கையாள வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருக்கிறார். ஊடகச் சுதந்திரத்துக்கு தடைகளை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்துக்கு எதிராகவும் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டங்களை நடத்தும் என்பதுடன், அதற்கு எதிராக நீதியை நிலைநாட்டும் செயல்பாடுகளையும் முன்னெடுப்போம்.
நாட்டின் அடிமட்டத்திலும், நீதிமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இதற்கு எதிரான போராட்டங்களை செய்வதற்கு தயாராக உள்ளோம்.‘‘ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

