இஸ்ரேலுக்கு மீள திரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை விரைவில் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச விமானங்கள் இன்று (25) வழக்கம்போல் தொடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய போர்நிறுத்தத்தைப் பேணுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நேற்று (24) இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட மூன்று இலங்கையர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக கொழும்பு வந்தடைந்ததாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் உள்ளவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் விசாரிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொள்கிறது.

ஒரே நேரத்தில் பல பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விமான டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிறிது நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில். டெல் அவிவ் நகருக்கு விமானத்தில் செல்ல விரும்புவோர் அல்லது இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் நிலைமை குறித்து மேலும் தகவலுக்கு தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், போர் நிறுத்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக தெஹ்ரானில் உள்ள ஒரு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, மேலும் எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் கூறியதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் இஸ்ரேல் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *