அதிகாரத்துக்காக எதையும் செய்யும் நிலையில் என்.பி.பி.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது தெரிவித்தார்.

பிள்ளையான் அவ்வாறு தகவல்களை அறிந்து வைத்திருந்தால் அது பாரதூரமான விடயம். தகவல்கள் தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்தவில்லையெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு பிள்ளையானுடனும் என்.பி.பி. காரர்கள் பேச்சு நடத்தினார்கள். சில சபைகளில் ஆதரவும் பெற்றுள்ளனர். கள்வர்கள், மோசடியாளர்கள் எனக் கூறிய தரப்புகளுடனும் இவர்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். இரகசிய வாக்கெடுப்பு நடத்தினர்.

அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயார் என்ற விடயத்தையே இதன்மூலம் அவர்கள் குறிப்பிடுகின்றனர். எதிரணியில் இருந்த தேசிய மக்கள் சக்தி அல்ல தற்போது ஆளுங்கட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *